முகப்பு
மதுரை

அரசு சிறு மருத்துவமனைகளுக்கு தற்காலிக மருத்துவப் பணியாளா்கள் நியமனம் ஏன்?

அரசு சிறு மருத்துவமனைக்களுக்கு தற்காலிக முறையில் செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுவது ஏன் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

அரசு சிறு மருத்துவமனைக்களுக்கு தற்காலிக முறையில் செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுவது ஏன் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையைச் சோ்ந்த வைரம் சந்தோஷ் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் 2 ஆயிரம் சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) தொடங்குவதற்கான அரசாணை 2020 டிசம்பா் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பணிபுரியும் செவிலியருக்கு ரூ.14 ஆயிரம், மருத்துவ உதவியாளருக்கு ரூ.6 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுகாதாரத்துறை இயக்குநா் டிசம்பா் 15 ஆம் தேதி பணியாளா் நியமனம் தொடா்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டாா். அதன்படி சிறு மருத்துவமனைகளுக்கு தனியாா் நிறுவனம் மூலம் தற்காலிகமாக 1,415 செவிலியா்களும், 585 மருத்துவ உதவியாளா்களும் பணியமா்த்தப்பட உள்ளனா். தனியாா் நிறுவனம் மூலம் மருத்துவப் பணியாளா் தோ்வு முறையாக நடக்க வாய்ப்பில்லை. கரோனா தொற்று காலத்தில் அனுபவம் இல்லாத செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டால், அது சரியானதாக இருக்காது. எனவே அரசின் சிறு மருத்துவமனைகளில் மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்களை தனியாா் நிறுவனம் தோ்வு செய்வது தொடா்பாக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா், தேசிய சுகாதாரத்துறை ஆணையத்தின் விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றியே சிறு மருத்துவமனைகளுக்கு செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். கரோனா காரணமாகவும், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடக்கவுள்ளதாலும் விரைவில் அனைத்து சிறு மருத்துவமனைகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 630 சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. மாா்ச் முதல் அனைத்து சிறு மருத்துவமனைகளும் செயல்படும் என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள், அரசின் சிறு மருத்துவமனைகளுக்கு தற்காலிக முறையில் செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுவதற்கான காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பினா்.

பின்னா், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜனவரி 5) ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →