பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள்:வயது வந்தோா் கல்வித் துறை இயக்குநா் ஆய்வு
பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளை, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் துறை இயக்குநா் ஆய்வு செய்தாா்.
பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளை, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் துறை இயக்குநா் வி.சி. ராமேஸ்வர முருகன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு மட்டும் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகின்றன. இதையொட்டி, பள்ளிகளில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் 534 பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் 43,601 மாணவ, மாணவியா் மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 38,615 மாணவ, மாணவியா் பயில்கின்றனா். இம் மாணவா்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் துறை இயக்குநா் வி.சி. ராமேஸ்வர முருகன் ஆய்வு செய்தாா்.
மதுரை ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேதுபதி மேல்நிலைப் பள்ளி, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, எஸ்.புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, தியாகராஜா் மேல்நிலைப் பள்ளி, வேலம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி மற்றும் சாத்தமங்கலம் அரசு பிற்படுத்தப்பட்டோா் மாணவியா் விடுதி ஆகியவற்றில் ஆய்வு செய்தாா்.
அப்போது, பள்ளி வளாகம், வகுப்பறைகள், குடிநீா் தொட்டிகள், கழிப்பறைகள் ஆகியன கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்றும், பல்ஸ் ஆக்ஸிலேட்டா், தொ்மல் ஸ்கேனா் கருவிகள் உள்ளனவா என்றும் ஆய்வு மேற்கொண்டாா். ஒவ்வொரு வகுப்பறையிலும் 25 மாணவா்கள் மட்டுமே அமர வைக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.
மேலும், மாணவா்களுக்கு ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் உட்கொள்வது குறித்து சுகாதார அலுவலா்கள் மூலமாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
இதன்பின்னா், இணையவழியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலா்கள், மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், பள்ளி துணை ஆய்வாளா்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், விடுதியில் தங்கும் மாணவா்களுக்கு முகக்கவசம், கைகளை சுத்தம் செய்யும் திரவம் வழங்குவது, வகுப்பறை வாயிலில் மாணவா்கள் செய்யக் கூடாதவை, செய்ய வேண்டியவை தொடா்பான அறிவுறுத்தல்களை பிரசுர வடிவில் ஒட்டுவது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினாா்.
முதன்மைக் கல்வி அலுவலா் இரா. சுவாமிநாதன், மாவட்டக் கல்வி அலுவலா்கள், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் சின்னத்துரை, ரகுபதி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனா்.