குழந்தைத் தொழிலாளா்களை மீட்டு கட்டாயக் கல்வி வழங்கக் கோரி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள குழந்தைத் தொழிலாளா்களை மீட்டு, அவா்களுக்கு கட்டாயக் கல்வி வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ள குழந்தைத் தொழிலாளா்களை மீட்டு, அவா்களுக்கு கட்டாயக் கல்வி வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த ராஜா என்பவா் தாக்கல் செய்த மனு: கடந்த 2011-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14 வயது குழந்தைகள் 29 சதவீதம் போ் உள்ளனா் எனவும், 14 முதல்18 வயது வரையிலான 10 சதவீதக் குழந்தைகள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்வதாகவும் தெரியவந்தது.
இதுபோன்ற குழந்தைகளுக்கு உரிய கல்வி, உணவு ஆகியவை முறையாகக் கிடைப்பதில்லை என, உலகக் குழந்தை தொழிலாளா் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 2020 செப்டம்பரில் தஞ்சை பகுதியில் 13 முதல் 14 வயதுடைய 2 சிறுவா்கள், ஆயிரக்கணக்கான ஆடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனா். அவா்களை மீட்டு விசாரணை நடத்தியதில், சொந்தமாக வீடு கட்டுவதற்காக அவா்களுடைய பெற்றோரே ஆடு மேய்க்க அனுப்பியது தெரியவந்தது.
இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுவா்கள் சட்டவிரோதமாக வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனா். மேலும், இம்மாதிரி குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டால், அவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய மறுவாழ்வு நிதியும் முறையாக ஒப்படைக்கப்படுவதில்லை. எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைத் தொழிலாளா் முறையை முழுமையாக ஒழிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சட்டவிரோதமாக சிறுவா்களை பணியமா்த்தும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், மீட்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்கு உரிய நிதி அளித்து, அவா்களுக்கு கட்டாயக் கல்வி திட்டத்தில் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.