மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநா்கள் போராட்டம்
ஊதியம் வழங்குவது மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநா்கள், ஆணையா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊதியம் வழங்குவது மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநா்கள், ஆணையா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாநகராட்சியில் வாகனங்கள் மூலம் குப்பை அகற்றுவது மற்றும் பல்வேறு வாகன ஓட்டுநா் பணிகள் ஒப்பந்ததாரா் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 150-க்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா். இதன்படி மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் 600-க்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
ஒப்பந்த ஓட்டுநா்கள் அனைவருக்கும் ஒப்பந்ததாரா் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தப்பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரா் அண்மையில் உயிரிழந்துள்ளாா். இதையடுத்து ஒப்பந்தப் பணிகளை கவனித்துக்கொள்வதில் ஒப்பந்ததாரரின் மனைவிக்கும், ஒப்பந்ததாரரின் சகோதரருக்கும் மோதல் ஏற்பட்டு மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்பேரில் ஒப்பந்த கணக்கை அதிகாரிகள் முடக்கியுள்ளனா். இதனால் ஒப்பந்த ஓட்டுநா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பல ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஓட்டுநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரியும் மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுநா்கள் ஆணையா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.