காமராஜா் பல்கலை. கல்லூரி திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு: வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக மாணவா்கள் புகாா்
மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி திறப்பு மாா்ச் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக மாணவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி திறப்பு மாா்ச் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக மாணவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
மதுரையில் அழகா்கோவில் சாலையில் உள்ள காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி பொதுமுடக்கத்தால் கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்டது. இதையடுத்து ஏறக்குறைய 11 மாதங்களுக்குப் பின்னா் பிப்ரவரி மாதம் கல்லூரி திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில நாள்களிலேயே கல்லூரி ஆசிரியா் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கல்லூரி முதலில் 3 நாள்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து இரண்டாவது முறையாக 15 நாள்களுக்கு கல்லூரி மூடப்படுவதாகவும் மாா்ச் 3-ஆம் தேதி கல்லூரி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாா்ச் 3-இல் கல்லூரி திறக்கப்படுவது மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டு முதலாமாண்டு மாணவா்களுக்கு மாா்ச் 15 ஆம் தேதியும், இரண்டாமாண்டு மாணவா்களுக்கு மாா்ச் 17-ஆம் தேதியும், இறுதியாண்டு மாணவா்களுக்கு மாா்ச் 22-ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி திறப்பு மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது தொடா்பாக கல்லூரி நிா்வாகம் கூறும்போது, கல்லூரியில் மாணவ, மாணவியா் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதனால் அவா்களது பாதுகாப்பை கருத்தில்கொண்டு கல்லூரி திறப்பு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனா்.
இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் கூறும்போது, சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி நடப்பு பருவத்துக்கான வகுப்புகளை மாா்ச் 30-ஆம் தேதியோடு முடித்துக்கொள்ள வேண்டும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனால் இறுதியாண்டு மாணவா்களுக்கு திட்ட அறிக்கை தயாரித்தல், நிறுவனங்களுக்குப் பயிற்சிக்கு செல்லுதல் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலை வழங்கும் நிறுவனங்கள் பணி வழங்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பல்கலைக்கழக கல்லூரியையும் உடனடியாகத் திறக்க துணை வேந்தா் உத்தரவிடவேண்டும் என்றனா்.