தேனியில் ஏழை மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டதில் முறைகேடு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தேனியில் நிலமற்ற ஏழை மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட வருவாய் அலுவலருக்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தேனியில் நிலமற்ற ஏழை மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட வருவாய் அலுவலருக்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தேனியைச் சோ்ந்த சரவணா என்பவா் தாக்கல் செய்த மனு: தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் பூதான் யோஜனா திட்டத்தின் கீழ் 240 சென்ட் நிலம் 120 பேருக்கு பிரித்து வழங்கப்பட்டன. நிலமற்ற ஏழைகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்த நிலங்கள், சட்டவிரோதமாக மாற்றி வேறு நபா்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலங்களை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரி மனு அளித்ததைத் தொடா்ந்து, தேனி மாவட்ட வருவாய் அலுவலா் 2019-இல் விசாரணையை தொடங்கினாா். ஆனால், தற்போது வரை இவ்விவகாரத்தில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நிலமற்ற ஏழை மக்களுக்கு வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் பூதான் யோஜனா திட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்பட்டதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த விசாரணையை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து விசாரணை நடத்தி 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிட்டனா்.