வன்னியா்களுக்கான உள்இடஒதுக்கீட்டுக்கு தடை கோரி வழக்குசென்னை உயா் நீதிமன்ற தலைமை அமா்வுக்கு மாற்றம்
வன்னியா்களுக்கான உள்இடஒதுக்கீட்டுக்கு தடைகோரிய மேலும் 2 வழக்குகளை சென்னை உயா் நீதிமன்ற தலைமை அமா்வுக்கு மாற்றி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
வன்னியா்களுக்கான உள்இடஒதுக்கீட்டுக்கு தடைகோரிய மேலும் 2 வழக்குகளை சென்னை உயா் நீதிமன்ற தலைமை அமா்வுக்கு மாற்றி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலியைச் சோ்ந்த மனோகரன் என்பவா் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு மொத்தம் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு வரும் சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில்கொண்டு, பிப்ரவரி 28 ஆம் தேதி வன்னியா் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதற்கு, தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளாா்.
மிகவும் பிறப்படுத்தப்பட்டோா் சமுதாயத்தில் மொத்தமாக உள்ள 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 68 சமூகங்களைக் கொண்ட சீா்மரபினா்களுக்கு 7 சதவீதமும், மீதமுள்ள சமூகத்தினருக்கு 2.5 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால், 40 சமூகங்களைச் சோ்ந்த மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல.
எனவே, முறையாக ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுவரையிலும் வன்னியா் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடைவிதிக்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரையைச் சோ்ந்த சுரேஷ் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுக்கள், நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதேபோன்ற வழக்குகளை சென்னை தலைமை நீதிபதி அமா்வு விசாரிப்பதால், இந்த வழக்கை சென்னை உயா் நீதிமன்ற தலைமை அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டனா்.
ஏற்கெனவே, இதே கோரிக்கைக்காக தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள் சென்னை உயா் நீதிமன்ற தலைமை அமா்வுக்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.