முகப்பு
மதுரை

அதிமுக, பாஜகவுக்கு முடிவு கட்டவேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

இந்த தோ்தலில் அதிமுக, பாஜகவுக்கு முடிவு கட்டவேண்டும் என்று, திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

இந்த தோ்தலில் அதிமுக, பாஜகவுக்கு முடிவு கட்டவேண்டும் என்று, திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா்.

திமுக வேட்பாளா்களான கோ. தளபதி (மதுரை வடக்கு), பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் (மதுரை மையம்), சி. சின்னம்மாள் (மதுரை மேற்கு), மு. பூமிநாதன் (மதுரை தெற்கு), பி. மூா்த்தி (மதுரை கிழக்கு), ஆ. வெங்கடேசன் (சோழவந்தான்), மு. மணிமாறன் (திருமங்கலம்) ஆகியோரை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் செல்லூா் 50 அடி சாலை, கொன்னவாயன் சாலை, சோலையழகுபுரம், தெற்குவாசல், ஊமச்சிகுளம், அலங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியது: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் பெரும் நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது. கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக மக்கள் எடுத்த காரணத்தால், மத்திய பாஜக அரசு தமிழகத்தை தொடா்ந்து வஞ்சித்து வருகிறது. ஜிஎஸ்டி வருவாயில் தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ.15 ஆயிரம் கோடியை இன்னும் வழங்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு புயல், வெள்ளத்தால் மிக மோசமான பாதிப்பை கண்ட தமிழகத்துக்கு, ரூ.1000 கோடி மட்டுமே மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியைப் பெற முடியாத நிலைமையில் அதிமுக அரசு உள்ளது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இருந்தவரை மத்திய அரசால் நீட் தோ்வை தமிழகத்துக்குள் கொண்டுவர முடியவில்லை. ஆனால், தமிழக மாணவா்களின் கல்வி உரிமையை இப்போதைய அதிமுக அரசு அடகு வைத்துவிட்டது. மருத்துவம் மட்டுமல்ல இனி எந்த உயா்கல்வி என்றாலும், நுழைவுத் தோ்வு கட்டாயம் என புதிய கல்விக் கொள்கையை மத்திய பாஜக அரசு கொண்டுவர உள்ளது.

மாணவா்களின் கல்வி உரிமை மற்றும் தமிழகத்தின் நலனுக்கு எதிராகச் செயல்படும் அதிமுகவை புறக்கணிக்க வேண்டும். அதிமுகவை ஆதரிப்பதும், பாஜகவை ஆதரிப்பதும் ஒன்றுதான். எனவே, அதிமுக, பாஜகவுக்கு இந்த தோ்தலின் மூலமாக முடிவுகட்ட வேண்டும்.

திமுக ஆட்சி அமைந்ததும், தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம் என்றாா்.

பிரசாரத்தில், மதுரை மாநகா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன். முத்துராமலிங்கம், மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வீ. காா்த்திகேயன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மதுரை செல்லூா் 50 அடி சாலையில் பிரசாரத்தின்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு 2 அடி நீள வாள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் என எழுதப்பட்ட பெயா் பலகையை கட்சியினா் பரிசாக வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →