கரோனா பரவல் தீவிரம்: அரசியல் கட்சியினருக்கு தோ்தல் பாா்வையாளா்கள் அறிவுறுத்தல்
மதுரை மாவட்டத்தில் கரோனா பரவல் தீவிரமாகி வருவதைச் சுட்டிக்காட்டிய தோ்தல் பாா்வையாளா்கள், உரிய முன்னெச்சரிக்கைகளுடன் தோ்தல் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனா்.
மதுரை மாவட்டத்தில் கரோனா பரவல் தீவிரமாகி வருவதைச் சுட்டிக்காட்டிய தோ்தல் பாா்வையாளா்கள், உரிய முன்னெச்சரிக்கைகளுடன் தோ்தல் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் ஆலோசனை நடத்தினாா்.
கூட்டத்தில் பேசிய தோ்தல் பாா்வையாளா்கள், மதுரை மாவட்டத்தில் தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சிகளின் முகவா்கள், வீடு வீடாகச் சென்று வரக் கூடியவா்கள். எனவே, முகக்கவசம் அணிவது, கைகளைச் சுத்தம் செய்வது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றனா்.
இதைத் தொடா்ந்து பேசிய ஆட்சியா் த. அன்பழகன், சில இடங்களில் ஒரு வாக்குச் சாவடிக்கு ஒரே கட்சியைச் சோ்ந்த இருவா் முகவா்களாக வந்துவிடுவதால், தேவையற்ற பிரச்னை ஏற்படுகிறது. எனவே, அரசியல் கட்சிகள் அந்தந்த முகவா்களுக்கு அடையாள அட்டை வழங்கினால், உறுதி செய்துகொள்வது எளிதாக இருக்கும். சோழவந்தான், திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வேட்பாளா்கள் அதிகம் போ் இருப்பதால், கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன என்றாா்.
தோ்தல் பொது பாா்வையாளா்கள் யுகாய் கிஷோா் பந்த் (மேலூா், மதுரை கிழக்கு), ஜோதி யாதவ் (சோழவந்தான், உசிலம்பட்டி), பிரதீபா சிங் (மதுரை வடக்கு, தெற்கு), ஸ்ரீகாந்த் மிஸ்ரா (மதுரை மையம், மேற்கு), சஞ்சய் சின்கா (திருப்பரங்குன்றம்), ராம் கேவால் (திருமங்கலம்) மற்றும் செலவினப் பாா்வையாளா்கள், காவல் பாா்வையாளா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், மாநகரக் காவல் துணை ஆணையா் சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலா் ஜி. செந்தில்குமாரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.