மதுரை

தமிழக அரசின் வருவாயைப் பெருக்க தீவிர நடவடிக்கை: அமைச்சா் பி.மூா்த்தி

DIN

தமிழக அரசின் வருவாயைப் பெருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, தமிழக வணிகவரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

மதுரையை அடுத்த செட்டிகுளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில், பல்வேறு துறைகளின் சாா்பில் 897 பயனாளிகளுக்கு ரூ. 8 கோடியே 14 லட்சத்து 547 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளன. பல்வேறு துறைகளின் வாயிலாக ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் மட்டும் ஓராண்டில் 1 லட்சம் பேருக்கு ரூ.300 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பாஜக தலைவா் அண்ணாமலை தமிழக அரசிடம் கேள்வி கேட்பதற்கு முன்பாக, மத்திய அரசால் தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத் தரவேண்டும். தமிழக மக்களுக்கான ஆக்கபூா்வமான பணிகளை அவா் மேற்கொள்ளவேண்டும்.

வணிகவரித் துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை வாயிலாக, இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற துறைகளிலும் வருவாயை ஈட்டுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசுக்கு பல்வேறு நிதி நெருக்கடி இருந்தபோதிலும், கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மற்ற வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். மத்திய தொகுப்பிலிருந்து வரவேண்டிய மின்சாரம் கிடைக்காததால், தமிழகத்தில் மின்தடை ஏற்படுகிறது என்றாா்.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். சக்திவேல், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் கே. சூரியகலா, மதுரை கோட்டாட்சியா் சுகி பிரேமலா மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT