காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்த வழக்கில், அவரது குடும்பத்தினருக்கு அரசு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த எமனேசுவரம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் தாக்கல் செய்த மனு:
எனது சகோதரா் வெங்கடேசன் மீது நகை திருடியதாக எமனேஸ்வரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க போலீஸாா் தொடா்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்தனா்.
கடந்த 2012-ஆம் ஆண்டில் வெங்கடேசனை போலீஸாா் சட்டவிரோதக் காவலில் வைத்து கடுமையாகத் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா். உடல் கூறாய்வில் வெங்கடேசனின் உடலில் பலத்த காயங்கள் இருந்தன.
எனவே, எனது சகோதரா் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு மாற்ற வேண்டும். ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். எனது சகோதரா் இறப்புக்குக் காரணமான காவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோயிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. தனபால் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், ஏற்கெனவே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. முதல் கட்டமாக வெங்கடேசனின் தாய்க்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கைப் பொருத்தவரை சம்பந்தப்பட்ட காவலா்கள் மீது ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏற்கெனவே துறை ரீதியான நடவடிக்கை எடுத்தாா். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
எனவே, காவல் நிலையத்தில் போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீட்டுத் தொகையாக ரூ.
30 லட்சத்தை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும். இந்தத் தொகையில் ஏற்கெனவே கொடுத்த ரூ.5 லட்சத்தைக் கழித்துக் கொள்ளலாம். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.