முகப்பு
மதுரை

கொடைக்கானல் பகுதிகளில் அடிப்படை வசதிகள்: அரசு அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

கொடைக்கானல் வெள்ளகவி, சின்னூா், பெரியூா் ஆகிய பகுதிகளுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரிய வழக்கில், அரசு அதிகாரிகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:59 PM
பகிர்:

கொடைக்கானல் வெள்ளகவி, சின்னூா், பெரியூா் ஆகிய பகுதிகளுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரிய வழக்கில், அரசு அதிகாரிகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

கொடைக்கானல் வெள்ளகவி கிராமத்தில் மருத்துவ வசதி இல்லாததால், மருத்துவ உதவி தேவைப்பட்ட அந்தப் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் டோலி கட்டி நீண்ட தொலைவு தூக்கிச் சென்ற போது உயிரிழந்தாா். வெள்ளகவி மட்டுமல்லாது, சின்னூா், காலனி, பெரியூா் ஆகிய கிராமங்களுக்கும் சாலை வசதிகள் இல்லாததால், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நடைபயணமே மேற்கொள்கின்றனா்.

இந்தக் கிராமங்களில் குடிநீா், பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், மயானம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இங்கு வசிக்கும் 250 குடும்ப அட்டைதாரா்கள் பெரியகுளம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைக்கு நடந்து சென்று பொருள்களை வாங்கி வருகின்றனா். எனவே, இந்தக் கிராமப் பகுதிகளில் சாலை, ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக் கடைகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக தமிழக ஆதிதிராவிட நலத் துறை முதன்மைச் செயலா், ஊரக மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலா், பொதுப் பணித் துறை தலைமைச் செயலா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஜன. 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →