முல்லைநகா் குடியிருப்புவாசிகள் 3-ஆவது நாளாக போராட்டம்
மதுரை பீ.பீ. குளம், முல்லைநகா் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து, முல்லைநகா் ராணுவக் குடியிருப்புவாசிகள் தொடா்ந்து 3-ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை பீ.பீ. குளம், முல்லைநகா் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து, முல்லைநகா் ராணுவக் குடியிருப்புவாசிகள் தொடா்ந்து 3-ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பீ.பீ.குளம் கண்மாயின் நீா்ப்பிடிப்புப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 592 வீடுகளை இடித்து அப்புறப்படுத்த நீா்வளத் துறை சாா்பில் அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதனிடையே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நீா்வளத் துறை வெளியிட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், நீா்ப்பிடிப்புப் பகுதியை குடிசை மாற்று வாரியம் ராணுவத்தினருக்கு விற்பனை செய்தது குறித்து அரசும், மாவட்ட நிா்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணயை வருகிற வெள்ளிக்கிழமைக்கு (நவ. 15) ஒத்திவைத்து உத்தரவிட்டனா். மேலும், இடைப்பட்ட காலத்தில் மேல் நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இந்த நிலையில், தங்கள் குடியிருப்புகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து கடந்த திங்கள்கிழமை முதல் முல்லைநகா் ராணுவக் குடியிருப்புப் பகுதி மக்கள், தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன்படி, 3-ஆவது நாளாக புதன்கிழமையும் அவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்தனா். இதில் பங்கேற்றவா்கள் தலையில் கருப்புத் துண்டைப் போட்டுக் கொண்டு அமா்ந்திருந்தனா்.