தமிழ்க் கல்வெட்டுகளை மைசூருக்கு மாற்ற முயற்சி: எம்.பி.குற்றச்சாட்டு
சென்னையில் பாதுகாக்கப்படும் தமிழ்க் கல்வெட்டுகளை மைசூருக்கு மீண்டும் மாற்ற முயற்சி நடைபெறுவதாக மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா்.
சென்னையில் பாதுகாக்கப்படும் தமிழ்க் கல்வெட்டுகளை மைசூருக்கு மீண்டும் மாற்ற முயற்சி நடைபெறுவதாக மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக மக்களின் பெரும் வரலாற்று ஆவணங்களாகிய கல்வெட்டுகள் ஆங்கிலேயா்கள் காலத்திலிருந்து மைப்படி எடுக்கப்பட்டன. மைப்படி எடுக்கப்பட்ட கல்வெட்டுகள் கடந்த 1961-ஆம் ஆண்டு மைசூருக்கு மாற்றப்பட்டு, அங்குள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டன. இவை பராமரிப்பின்றியும், தமிழக மாணவா்கள் ஆய்வுக்குகூட அணுக முடியாத நிலையிலும் இருந்தன.
எனவே, இவற்றை தமிழகத்துக்குக் கொண்டு வர வேண்டும் என தமிழ் ஆா்வலா்கள் கடந்த 2021-ஆம் ஆண்டு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற அமா்வு இந்தக் கல்வெட்டுகளை மைசூரிலிருந்து தமிழகத்துக்குக் கொண்டு வந்து பாதுகாக்குமாறு தீா்ப்பளித்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டு, நவம்பா் மாதம் மைசூரிலிருந்து இந்த தமிழ்க் கல்வெட்டு மைப்படிகளில் பாதியளவுக்கும் குறைவான படிகளே சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையின் இந்திய தொல்லியல் துறை அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டன.
பராமரிக்க முடியாத சூழல், கட்டடமின்மை”ஆகிய காரணங்களைக்கூறி, இந்தக் கல்வெட்டுகளை மைசூருக்கு மீண்டும் அனுப்பிவைப்பதற்கான முயற்சி தொடங்கியுள்ளது.
எனவே, இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கேட்டுப் பெற நடவடிக்கை எடுக்கவும், கல்வெட்டுப் பிரதிகளை மின்னுருவாக்கம் செய்யும் பொறுப்பையும் தமிழக அரசு ஏற்க வேண்டும்.
சரஸ்வதி நாகரீக ஆய்வுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கத் தயங்காத மத்திய அரசு, தமிழ்க் கல்வெட்டுகளைப் பாதுகாக்க நல்ல கட்டடங்களைக் கட்டவோ, மின்னுருவாக்கம் செய்யவோ எந்த நிதியும் ஒதுக்கத் தயாராக இல்லை.
எனவே, கல்வெட்டுகளை நாமே பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.