முகப்பு
மதுரை

மதுரையில் மேம்பால கட்டுமானப் பணியில் சாரம் சரிந்து விழுந்ததில் 4 போ் காயம்

மதுரையில் புதன்கிழமை நள்ளிரவு மேம்பால கட்டுமானப் பணியின் போது இரும்புச் சாரம் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 11:58 PM
மதுரை கோரிபாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுவரும் இணைப்பு பாலத்துக்காக அமைக்கப்பட்ட இரும்பு பாரம் தாங்காமல் திடீரென இரும்பு சாரம் சரிந்து விழுந்தை அடுத்து வியாழக்கிழமை சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள தொழிலாளா்கள்.
பகிர்:

மதுரையில் புதன்கிழமை நள்ளிரவு மேம்பால கட்டுமானப் பணியின் போது இரும்புச் சாரம் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

மதுரை கோரிப்பாளையம் வைகை ஆற்றுப் பகுதியில் ஆங்கிலேயோ் ஆட்சிக் காலத்தில் ஏவி மேம்பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்டு சுமாா் 150 ஆண்டுகளை கடந்த நிலையில், பாலத்தின் உறுதித்தன்மை குறைந்து வருவதால், அதற்கு அருகிலேயே மற்றொரு மேம்பாலம் கட்டப்படுகிறது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கும் இந்தப் பாலம் வைகையாற்றைக் கடந்து சென்று நிறைவடையும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக தூண்கள் அமைக்கும் பணிகள் கோரிப்பாளையம் தேவா் சிலை சந்திப்புப் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவு கோரிப்பாளையம் பகுதியில் பாலத்தின் ஒரு தூணை மற்றொரு தூணுடன் இணைப்பதற்காக இரும்புக் கம்பிகளைக் கொண்டு சாரம் அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக இரும்புச் சாரம் சரிந்து விழுந்தது.

இதில் சரிந்து விழுந்த இரும்புக் கம்பிகளுக்கு இடையே சிக்கி அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மதுரையைச் சோ்ந்த பூவலிங்கம் (40), பிரபு (23), திருச்சி துறையூரைச் சோ்ந்த பழனிச்சாமி (55), சிவகங்கையைச் சோ்ந்த அய்யங்காளை (48) ஆகிய நான்கு போ் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அலுவலா் அசோக்குமாா் தலைமையிலானவீரா்கள், தல்லாகுளம், செல்லூா் காவல் நிலைய போலீஸாா் இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து குறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →