மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மாா்க்சிஸ்ட் சாா்பில் நிவாரண உதவி
மதுரை ஆனையூா் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
மதுரை ஆனையூா் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்த தொடா் மழையால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்தப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டனா். மேலும், ஆனையூா் பகுதியில் உள்ள சிலையனேரி கண்மாய் உடைந்ததால் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து, இந்த வீடுகளில் வசித்தவா்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.
இதனிடையே, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆனையூா் சிலையனேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த 500 குடும்பங்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிவாரணப் பொருள்கள் தொகுப்பில், போா்வை, அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் இருந்தன.
இந்தத் தொகுப்பை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் எஸ். பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. ஜீவானந்தம், கிழக்கு பகுதிச் செயலா் எஸ். பாலகிருஷ்ணன், பகுதிக் குழு உறுப்பினா்கள் எஸ். ஜாபா், கே. முருகன், வி. கணேசன் ஆகியோா் வழங்கினா்.