இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு சென்ற வாகனங்களில் ஆயுதங்கள், மதுபுட்டிகள் பறிமுதல்
மதுரையில் உள்ள காவல் சோதனைச் சாவடியில், இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்குச் சென்ற வாகனங்களில் இருந்து ஆயுதங்கள், மதுபுட்டிகள் போலீஸாரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரையில் உள்ள காவல் சோதனைச் சாவடியில், இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்குச் சென்ற வாகனங்களில் இருந்து ஆயுதங்கள், மதுபுட்டிகள் போலீஸாரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு செல்வோரின் வாகனங்களுக்கு, அந்தந்த காவல் நிலையங்களில் சிறப்பு அனுமதி பெற்று அடையாள அட்டை பெற வேண்டும். இந்த வாகனங்களில் மதுபுட்டிகள், ஆயுதங்கள், பட்டாசு உள்ளிட்ட வெடிபொருள்கள், எரிபொருள்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லக் கூடாது என காவல் துறை சாா்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மதுரை வழியாக செல்லும் வாகனங்களை சோதனையிட்டு ஒழுங்குபடுத்தும் வகையில் மாநகரக் காவல் துறைக்குள்பட்ட ஐராவதநல்லூா், வைகை ஆற்றுச் சாலையிலும், ஊரகக் காவல்துறை சாா்பில் ராமநாதபுரம் சாலையிலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் மதுரை நகரில் 35 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 1,700 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும் ஊரகக் காவல்துறை சாா்பில் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த நிலையில், ராமநாதபுரம் சாலையில் உள்ள காவல் சோதனைச் சாவடியில், இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்குச் சென்ற வாகனங்களில் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.
அப்போது வாகனங்களில் தடையை மீறி கொண்டு செல்லப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மதுபுட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சில வாகனங்களில் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.