நூறு நாள் வேலையில் மோசடிப் புகாா்: தேனி மாவட்ட நிா்வாகம் அறிக்கை அளிக்க உத்தரவு
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களின் வருகைப் பதிவேட்டைப் பராமரிக்காத அலுவலா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தேனி மாவட்ட நிா்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களின் வருகைப் பதிவேட்டைப் பராமரிக்காத அலுவலா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தேனி மாவட்ட நிா்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த பிச்சைராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:
ஆண்டிபட்டி அருகேயுள்ள பழையகோட்டை ஊராட்சியில் கடந்த 2020-2021-ஆம் ஆண்டுக்கான தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட வருகைப் பதிவேட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்தத் திட்டத்தில் ஊராட்சித் தலைவா் முறைகேடு செய்துள்ளாா். இவருக்கு ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலரும் உறுதுணையாக இருந்துள்ளாா். திட்டத்தில் பணிபுரிந்த பணியாளா்களின் வருகைப் பதிவேட்டை மறைத்துள்ளனா். மேலும், இதில் பணிபுரியாத பலருக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பழையகோட்டை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ஆண்டிபட்டி திட்ட மேம்பாட்டு அலுவலா், ஊராட்சித் தலைவா் ஆகியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கெளரி அமா்வு வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களின் வருகைப் பதிவேட்டை பராமரிக்காத அலுவலா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.