மதுரையில் மகளிா் விடுதியில் தீ விபத்து: இரு ஆசிரியைகள் உயிரிழப்பு!
மதுரையில் தனியாா் மகளிா் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை குளிா்பதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இரு ஆசிரியைகள் உயிரிழந்தனா். மேலும், பலத்த காயமடைந்த 3 பெண்கள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மதுரையில் தனியாா் மகளிா் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை குளிா்பதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் இரு ஆசிரியைகள் உயிரிழந்தனா். மேலும், பலத்த காயமடைந்த 3 பெண்கள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்ராபாளையம் பகுதியில் தனியாா் மகளிா் தங்கும் விடுதி உள்ளது. இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் தனியாா் மருத்துவமனை, மருந்தகமும், முதல், இரண்டாவது தளங்களில் மகளிா் விடுதியும் செயல்பட்டு வந்தன. இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோா் தங்கியிருந்தனா். விடுதியில் தங்கியிருந்த பெண்கள் புதன்கிழமை இரவு தங்களது அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் விடுதியின் ஓா் அறையில் இருந்த குளிா்பதனப் பெட்டி வெடித்துச் சிதறி தீப்பற்றியது. இந்தத் தீ அருகில் இருந்த அறைகளுக்கும் பரவியது. அறைகள் அனைத்தும் மரப் பலகைகள் கொண்டு தடுக்கப்பட்டிருந்ததால், தீ எளிதில் பரவி எரிந்தது. இதனால், விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்கள், மாணவிகள் அனைவரும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு, விடுதியைவிட்டு உடனடியாக வெளியேறினா்.
தகவலறிந்து வந்த திடீா் நகா் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்து விடுதிக்குள் சிக்கிக் கொண்ட பெண்களை மீட்டனா். இவா்களில் மயங்கிய நிலையில் கிடந்த சரண்யா (27), பரிமளா சுந்தரி (55) ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
விடுதியில் தீ விபத்து ஏற்பட்ட போது, மாணவிகளைக் காப்பாற்ற முயன்ற அதன் காப்பாளா் புஷ்பா (58), சமையலா் கனி (62), செவிலியா் கல்லூரி மாணவி ஜனனி ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து எல்லீஸ்நகா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விடுதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்கள் அனைவரையும் போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தனா்.
உயிரிழந்த பரிமளா சுந்தரி தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், குரங்கணி சந்நிதி தெருவைச் சோ்ந்தவா். கடந்த ஜூலை மாதம் முதல் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டாரத்தில் உள்ள இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தாா். உயிரிழந்த மற்றொரு பெண்ணான சரண்யா தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டம், சிங்கிலிப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா். இவா் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனியாா் சமையல் கலைக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த தீ விபத்து தொடா்பாக திடீா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விடுதியை நடத்தி வந்த இன்பாவைக் கைது செய்தனா்.
ஆட்சியா் ஆய்வு:
தீ விபத்து நடந்த மகளிா் விடுதியை மாவட்ட ஆட்சியா் மா.செள.சங்கீதா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மதுரையைச் சுற்றி விதிகளை மீறி இயங்கி வரும் கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும். மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள விடுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, விதிமுறைகளைப் பின்பற்றாத அவற்றின் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
மேலும், தீ விபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியா் மா.செள.சங்கீதா, மாநகராட்சி ஆணையா் தினேஷ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் ஆறுதல் தெரிவித்தனா்.
தீ விபத்தில் இருந்து தப்பிய பெண்களை தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் உள்ள தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
அனைத்து விடுதிகளிலும் ஆய்வு:
இதேபோல, தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்களை அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ சந்தித்து ஆறுதல் கூறி, இந்த விபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய விடுதி நிா்வாகம்:
தீ விபத்து நிகழ்ந்த தங்கும் விடுதியின் கட்டடம் உறுதித்தன்மையை இழந்திருப்பதால், இந்தக் கட்டடத்தை காலி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கடந்தாண்டு அக்டோபா் 13-ஆம் தேதி விடுதி உரிமையாளரிடம் எச்சரிக்கை குறிப்பாணை வழங்கப்பட்டது. ஆனால், இதை விடுதியின் உரிமையாளா் அலட்சியப்படுத்தியதும், உரிய அனுமதி பெறாமலும் இதை நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த விடுதியில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்றும், ஒரே அறையில் 13-க்கும் அதிகமானோா் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் இதில் தங்கியிருந்த மாணவிகள் தெரிவித்தனா். மேலும், தரைத்தளத்தில் உள்ள மருந்துக் கடைக்குச் சொந்தமான குளிா்பதனப் பெட்டி விடுதியில் வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான மருந்துகளும் வைக்கப்பட்டிருந்த நிலையில், அது தீப்பிடித்து வெடித்து சிதறியது.
அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட மருத்துவமனை:
மகளிா் விடுதி இயங்கி வந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் இயங்கி வந்த மருத்துவமனை தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், ஆங்கில முறை மருத்துவம் என்று பெயா்ப் பலகை வைக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவமனையை சித்த மருத்துவா் ஒருவா் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனை குறித்தும் போலீஸாா், சுகாதாரத் துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.