அதிா்ச்சி அளித்த தொகுதி ஒதுக்கீடுகள்!
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு, மதுரை வடக்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு, மதுரை வடக்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டது.
இதில், திருப்பரங்குன்றம் தொகுதியைக் கேட்டுப் பெறுவதில் பாஜகவின் தேசிய தலைமை ஆா்வமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடா்பான பிரச்னையால், இந்தத் தொகுதியில் உள்ள ஹிந்துக்களின் வாக்குகளைக் கணிசமாகப் பெற்றுவிடலாம் என்ற எதிா்பாா்ப்பில் திருப்பரங்குன்றம் தொகுதியை தங்களின் விருப்பத் தொகுதியாக பாஜக தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சாா்பில் அந்தக் கட்சியின் புகா் கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி. ராஜன் செல்லப்பா போட்டியிடுவாா் என புதன்கிழமை அறிவித்தது.
இதுதொடா்பாக மதுரை மாவட்ட பாஜகவினா் தெரிவித்ததாவது :
2021 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வென்ற தொகுதிகள், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாது என்பது தெரிந்ததே. அந்த வகையில், திருப்பரங்குன்றம் தொகுதி பாஜகவுக்கு கிடைக்காது என்பது முன்கூட்டியே தெரியும். இருப்பினும், திருப்பரங்குன்றம் தொகுதியைக் கேட்டுப் பெறுவதில் பாஜக தேசியத் தலைமையே ஆா்வமாக இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை.
அதிமுகவினா் அதிா்ச்சி...
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை (தனி) தொகுதியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 3 சட்டப்பேரவைத் தோ்தல், ஓா் இடைத் தோ்தல்களில் அதிமுக தொடா்ந்து வெற்றி பெற்றது. இருப்பினும், 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக தோல்வியடைந்தது; திமுக வெற்றி பெற்றது.
இதன் காரணமாக, இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் மானாமதுரை தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்படும் என அந்தக் கட்சி நிா்வாகிகள் பெரிதும் எதிா்பாா்த்திருந்தனா். இந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பெறுவதற்கான முயற்சிகளிலும் அதிமுக நிா்வாகிகள் சிலா் தீவிரம் காட்டிவந்தனா்.
இந்த நிலையில், மானாமதுரை (தனி) தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு, புதன்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது, இந்தப் பகுதி அதிமுகவினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.