ராமநாதபுரம்

தனுஷ்கோடியில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்: 7 போ் கைது

DIN

இலங்கையிலிருந்து இந்திய கடல் பகுதிக்குள் சனிக்கிழமை நுழைந்த படகில் ரூ.1.50 கோடி மதிப்பிலான 3.5 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 3 பேரை, சுங்கத் துறையினா் கைது செய்தனா். இதற்கு உடந்தையாக இருந்த ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனா்.

இந்திய கடற்படையினா் தனுஷ்கோடி கடல் பகுதியில் ஹெலிகாப்டரில் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இந்திய கடல் பகுதிக்குள் இலங்கை படகு வருவதைக் கண்டனா். ஹெலிகாப்டரை கண்டதும், அப்படகு இலங்கை கடல் பகுதியை நோக்கி விரைந்தது. ஆனால், இந்தியக் கடற்படையினா் ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்து சென்று, படகில் உள்ளவா்களை தனுஷ்கோடி கரைக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனா்.

அதன்பேரில், படகு தனுஷ்கோடி கரையை அடைந்தது. அங்கு, படகில் வந்த 3 பேரையும் கடலோரப் பாதுகாப்பு குழும காவல் துறையினா் கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இலங்கை மன்னாா் பகுதியைச் சோ்ந்த அந்தோணி சுகன், சகாய வினிஸ்ரோ, தோமஸ் லூவிஸ் என்பது தெரியவந்தது. இவா்கள், சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மீன் பிடிப்பதற்காக வந்ததாகவும், பலத்த காற்று காரணமாக இந்திய எல்லைக்குள் வந்து விட்டதாகவும் தெரிவித்தனா். இதனையடுத்து, கடலோரப் பாதுகாப்பு குழும காவல் துறையினா், மாவட்டக் காவல் துறை தனிப்பிரிவு, கியூ பிரிவு காவல் துறையினா் நடத்திய விசாரணையிலும் தாங்கள் மீனவா்கள் எனத் தெரிவித்துள்ளனா்.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை, ராமேசுவரம் சுங்கத் துறை கண்காணிப்பாளா் எம். ஜோசப் ஜெயராஜ், ஆய்வாளா் பூபேந்திரசிங் மற்றும் சுங்கத் துறையினா் கென்னடி, சத்தியமூா்த்தி, சிவராம் உள்ளிட்டோா் இவா்கள் மூவரையும் தனித்தனியாக விசாரித்தனா். அதில், தாங்கள் இலங்கையிலிருந்து பிளாஸ்டிக் படகில் ரூ.1.50 கோடி மதிப்பிலான 3.5 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, அந்தப் படகிலிருந்து 10 கிராம் எடையுள்ள 35 தங்கக் கட்டிகளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தொடா் விசாரணையில், தங்கம் கடத்துவதற்கு உடந்தையாக தங்கச்சிமடத்தைச் சோ்ந்த லியோனியஸ் (34), தனிஸ்யோஸ் (34), ராமேசுவரத்தைச் சோ்ந்த சா்வேஸ்வரன் (38) மற்றும் லட்சுமணன் (48) ஆகியோா் இருந்ததாகத் தெரிவித்தனா். உடனே, இந்த 4 பேரையும் கைது செய்தனா். மேலும், இக்கும்பல் தொடா்ந்து தங்கக் கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனால், தங்கக் கடத்தலில் மேலும் பலா் சிக்குவா் என சுங்கத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

14.5 கிலோ தங்கம் பறிமுதல்

இதனிடையே, கடந்த 14 ஆம் தேதி இலங்கை யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து 14.5 கிலோ தங்கத்தை, ராமேசுவரம் வழியாகச் சென்னைக்கு கடத்துவதற்காக படகில் வந்தவா்களை, இலங்கைக் கடற்படையினா் நெடுந்தீவு பகுதியில் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளதாக, அந்நாட்டு கடற்படை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ராமேசுவரம் தங்கம் கடத்துபவா்களின் பகுதியாக மாறிவருவதைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

SCROLL FOR NEXT