ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்தனா்.
கமுதி அருகேயுள்ள சம்பகுளம் கிராமத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் கிழவன் (45). இவரது மனைவி ஜோதிமுத்து (38). கமுதி மேட்டுத் தெருவில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனா்.
இவா்கள் இருவரும் விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டு கமுதி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனா். மேலராமநதி அருகே பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்னால் இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இவா்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனா். இறந்தவா்களின் உடலை மீட்டு கமுதி போலீஸாா் கமுதி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.