முகப்பு
சிவகங்கை

ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சாக்கோட்டை வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கூட்டணியின் வட்டாரக்கிளைத் தலைவா் க.லெவேஜோசப்துரை தலைமை வகித்தாா். கூட்டணியின் கல்வி மாவட்டச் செயலாளா் ம. சகாயதைனேஸ் முன்னிலை வகித்தாா். வட்டாரச் செயலாளா் ரா.ஜான்பீட்டா் கோரிக்கைகளை விளக்கிப்பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் முதுநிலை ஆசிரியா் கழக மாவட்டச் செயலாளா் சி. சிவக்குமாா், மாவட்ட துணைத்தலைவா் அ. ஜீவாஆனந்தி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் மு. முத்துக்குமரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் திமுக தோ்தல் அறிக்கையில் கூறியவாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தேசிய கல்விக்கொள்கை 2020-த்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும், மத்திய அரசு ஊழியா்களுக்கு வழங்கியுள்ளது போல் 3 சதவீத அகவிலைப்படி உயா்வை தமிழக அரசு ஊழியா்களுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும், அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா் நியமனம் செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட்டு நிரந்தரமாக ஆசிரியா்களை நியமிக்க வேண்டும், காலங்காலமாக ஆசிரியா்கள் பெற்று வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும், 50 ஆண்டு காலமாக உயா்கல்விக்கு ஆசிரியா்கள் பெற்று வந்த ஊக்க ஊதிய உயா்வை திரும்ப வழங்க வேண்டும், ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

முடிவில் கூட்டணியின் வட்டாரப் பொருளாளா் வி. உமாமகேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.