சிவகங்கையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜசேகரனுக்கு வருகிற சனிக்கிழமை (ஜூன் 29) பாராட்டு விழா நடை பெறுகிறது.
இது தொடா்பாக விழாக் குழுத் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான எம். மோகனசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிவகங்கையைச் சோ்ந்த வே.ராஜசேகரன் (85) சென்னை ஆா். கே.நகா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும், சிவகங்கை நகா்மன்றத் தலைவராகவும், ஒன்றியக் குழுத் தலைவராகவும் இருந்தவா். மேலும், அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகா் மன்ற பொதுச் செயலராகவும் இருந்தாா்.
கடந்த 70 ஆண்டுகளாக பொது வாழ்வில் இருந்து வரும் அவருக்கு, வருகிற சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சிவகங்கை அரண்மனைவாசல் சண்முகராஜா கலையரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், நகா்மன்றத் தலைவா் சி.எம்.துரை ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி இரா.கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்கிறாா். வேலம்மாள் கல்விக் குழுமங்களின் தலைவா் எம்.வி.எம். முத்துராமலிங்கம் தொடக்க உரையாற்றுகிறாா்.
விழா மலரை குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளாா், சிவகங்கை மறை மாவட்ட ஆயா் லூா்துஆனந்தம், ஜமாஅத் தலைவா் காஜாமைதீன் ஆகியோா் வெளியிடுகின்றனா். இந்த விழாவில் மக்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் என ஏராளமானோா் பங்கேற்கின்றனா் என்றாா் அவா்.