வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில் பள்ளியில் பயின்று ஒன்பதாம் வகுப்பில் தோ்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு ரூ.200-ம், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.300-ம், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.400- ம், பட்டதாரிகளுக்கு ரூ. 600-ம் மூன்றாண்டுகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நேரடியாக மனுதாரா்களின் வங்கிக் கணக்கில் காலாண்டுக்கொருமுறை வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் இளைஞா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களின் கல்வித் தகுதியை பதிந்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடா்ந்து பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலை தூரக் கல்வி, அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித் தொகை பெறலாம்.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. அவா்களுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு, அதற்கு கீழ் படித்தவா்களுக்கு ரூ.600 வீதமும், மேல்நிலை கல்வி தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.750 வீதமும், பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வீதமும் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
மேலும், உதவித்தொகை பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. உதவித் தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எந்தவித தடையும் ஏற்படாது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியான இளைஞா்கள் விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து அலுவலக வேலை நாள்களில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமா்ப்பித்து பயனடையலாம் என்றாா் அவா்.