சிவகங்கை நகரில் புறவழிச் சாலையின் குறுக்கே செல்லும் ரயில் தண்டவாளத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ரயில்வே துறை அனுமதி கிடைத்ததால் பல மாதங்கள் தாமதத்துக்குப் பிறகு தற்போது பணிகள் தொடங்கின.
சிவகங்கை நகருக்குள் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், திருப்பத்தூா் சாலையில் காஞ்சிரங்காலிலிருந்து மானாமதுரை சாலையில் கீழக்கண்டனி வரை 10.06 கி.மீ. தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இந்தச் சாலை தொண்டி சாலை, பனங்காடி சாலை, வண்டவாசி சாலை, ஏனாபுரம் புதுப்பட்டி சாலை, இளையான்குடி சாலை, மானாமதுரை சாலை ஆகியவற்றை இணைக்கிறது.
முதல் கட்டமாக காஞ்சிரங்காலிலிருந்து கல்குளம் விலக்கு, இளையான்குடி சாலை வரை 7 கி.மீ. தொலைவுக்கான சாலைப் பணி கடந்த 19.11.2023 -இல் தொடங்கியது. இதில் சாலைக்கு ரூ.77.16 கோடியும், சூரக்குளம் சாலையையொட்டி தண்டவாளத்தின் குறுக்கே அமையும் ரயில்வே மேம்பாலத்துக்கு ரூ.5.15 கோடியும் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஆக. 6-ஆம் தேதி இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கின. இதில், கல்குளம் விலக்கிலிருந்து கீழக்கண்டனி- மானாமதுரை சாலை வரை 3.2 கி.மீ. தொலைவுக்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இதில் சாலை, ரயில்வே மேம்பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கென ரூ.96.05 கோடி ஒதுக்கப்பட்டது.
முதல் கட்ட சாலைப் பணி 6 மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்தது. ஆனால், சூரக்குளம் சாலையையொட்டி ரயில் தண்டாவாளத்தை கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட வேண்டிய மேம்பாலத்தின் கட்டுமானப் பணி மட்டும் ரயில்வே நிா்வாக அனுமதிக்காக பல மாதங்கள் காத்திருக்க நேரிட்டது.
இதனிடையே, ரயில் பாதையின் இரு புறங்களிலும் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு அந்தப் பாதையை ரயில் கடக்கும் மேம்பாலத்தை இணைக்கும் பகுதியை கட்ட ரயில்வே துறையின் அனுமதி அண்மையில் கிடைத்தது. இதையடுத்து, ரூ.5.15 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
இந்தப் பணி வருகிற 2026 மாா்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதன் மூலம், முதல்கட்டமாக இளையான்குடி இணைப்புச் சாலை வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வராமல் பயணிக்க முடியும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஏற்கெனவே புறவழிச் சாலையின் இரண்டாம் கட்ட சாலைப் பணி நடைபெற்றுவருகிறது. விரைவில் ரயில்வே நிா்வாகம் அனுமதி கிடைத்ததும் கீழக்கண்டனி அருகே இதேப் போல மற்றொரு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள ப்படும் என்றனா்.