சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்துள்ள புது வயல் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அடைக்கலம் (48). இவா், கடந்த 2019 நவம்பா் 3 -ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், சாக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் அடைக்கலத்தைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அடைக்கலத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவா் உத்தரவிட்டாா்.