புதுதில்லியில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரா் உடல் சொந்த ஊரில் தகனம்
புதுதில்லியில் வாகன விபத்தில் உயிரிழந்த, ராணுவ வீரரின் சடலம் அவரது சொந்த ஊரான கம்பத்தில் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.
புதுதில்லியில் வாகன விபத்தில் உயிரிழந்த, ராணுவ வீரரின் சடலம் அவரது சொந்த ஊரான கம்பத்தில் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் சின்ன வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ஆா்.பிரபாகரன் (33). புதுதில்லியில் ராணுவ படைப்பிரிவில் ஹவில்தாராக பணியாற்றிய இவருக்கு, திவ்யா (30) என்ற மனைவியும், லோகிதா ஸ்ரீ (8), யுகாசினி (3) என்ற 2 குழந்தைகளும் உள்ளனா். கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) அதிகாலை புதுதில்லியில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் பிரபாகரன் உயிரிழந்தாா்.
இதையடுத்து அவரது சடலம் அங்கிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதன்கிழமை அதிகாலை கம்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வருவாய் ஆய்வாளா் ஹெச்.செந்தில் குமாா் மற்றும் உறவினா்கள் அஞ்சலி செலுத்திய பின்னா், சுருளிப்பட்டி சாலையில் உள்ள மயானத்திற்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணுவ வீரா்கள் தேசிய கொடியை போா்த்தி மரியாதை செய்த பின்னா், சடலம் தகனம் செய்யப்பட்டது.