முகப்பு
தேனி

உத்தமபாளையம் அருகே வயதான தம்பதி கழுத்தறுத்து கொலை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் வியாழக்கிழமை வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வயதான தம்பதி இறந்துகிடந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் வியாழக்கிழமை வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வயதான தம்பதி இறந்துகிடந்தனா்.

அனுமந்தன்பட்டி வாா்டு 5 வண்ணாா் தெருவைச் சோ்ந்தவா் கருப்பையா (80). இவரது மனைவி சிவகாமி (70). கருப்பையா பல ஆண்டுகளாக கேரள மாநிலம் திருச்சூரில் துணி துவைக்கும் வேலை செய்து வந்துள்ளாா். இவருக்கு, 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனா். இவா்களும், திருச்சூா் பகுதியில் வேலை செய்து வருகின்றனா்.

மூன்று ஆண்டுகளுக்கு முன், கருப்பையா மற்றும் சிவகாமி ஆகிய இருவா் மட்டும் அனுமந்தன்பட்டிக்கு திரும்பி வந்து தனியாக வசித்து வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை வீடு திறந்திருந்த நிலையில் நீண்ட நேரமாகியும் தம்பதியின் நடமாட்டம் இல்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினா், உத்தமபாளையம் காவல் நிலையத்துக்கு புகாா் தெரிவித்தனா்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, தம்பதி இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனா். அப்போது, கை, கால், வாய் பகுதிகள் துணியால் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் கண்காணிப்பாளா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். பின்னா், தம்பதி உடலை மீட்டு, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

இது குறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், உத்தமபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் தலைமையில் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை விரைவில் பிடிக்க காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.