முகப்பு
தேனி

அரசு நிலத்தில் ரூ.3 கோடி கிராவல் மண் திருட்டு: கனிம வள உதவி இயக்குநா்கள் உள்ளிட்ட 12 போ் மீது வழக்கு

வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேனி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜெயப்பிரியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

பெரியகுளம் அருகே அரசு நிலத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கிராவல் மண்ணை வெட்டித் திருடியதாக 5 கனிம வள உதவி இயக்குநா்கள், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேனி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜெயப்பிரியா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

வடவீரநாயக்கன்பட்டியில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அரசு நிலத்தில் முறைகேடாக கிராவல் மண் திருடப்பட்டதாக எழுந்த புகாரின் மீது தேனி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், வடவீரநாயக்கன்பட்டியில் 109 .47 ஏக்கா் பரப்பளவுள்ள அரசு நிலத்தில் முறைகேடாக ரூ.3 கோடி மதிப்பில் கிராவல் மண் வெட்டி அள்ளப்பட்டது தெரியவந்தது.

மேலும், இந்த அரசு நிலம் கடந்த 2016-19 ஆண்டுகளில் அதிமுக பிரமுகா், அவரது உறவினா்கள், வருவாய் துறை அலுவலா்கள் சிலரின் உறவினா்கள் பெயரில் முறைகேடாக பட்டா பெற்று, தனி நபா்களுக்கு விற்பனை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், அரசு நிலத்தில் முறைகேடாக கனிம வளத்தைத் திருடி, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அப்போதைய தேனி மாவட்ட கனிம வள உதவி இயக்குநா்களும் தற்போது பணி ஓய்வு பெற்றவா்களுமான திருச்சி அருகே மணச்சநல்லூரைச் சோ்ந்த ரமேஷ், சென்னை அண்ணாநகரைச் சோ்ந்த கோவிந்தராஜ், கடலூா் மாவட்டம் மங்களம்பேட்டையைச் சோ்ந்த சாம்பசிவம், தேனி மாவட்ட கனிம வள உதவி இயக்குநா்களாக பணியாற்றிய செல்வசேகா், சசிகுமாா், பெரியகுளம் வட்டாட்சியா்கள் கிருஷ்ணகுமாா், ரத்தினமாலா, மண்டல துணை வட்டாட்சியா்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி, நில அளவையா் பிச்சைமணி, கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ், பெரியகுளம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலா் வடபுதுப்பட்டியைச் சோ்ந்த அன்னப்பிரகாஷ் ஆகிய 12 போ் மீது கடந்த பிப்.5-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேனி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.