முகப்பு
தேனி

கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம்: போடி நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா்

கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் தாமதம் செய்வதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போடி நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் தாமதம் செய்வதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போடி நகா்மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.

இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் ச. ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தாா். ஆணையா் பொறுப்பு வகிக்கும் பொறியாளா் செல்வராணி, துணைத்தலைவா் கிருஷ்ணவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அலுவல் சாா்ந்த 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னா் நடைபெற்ற விவாதம் வருமாறு:

உறுப்பினா் பிரபாகரன் (திமுக): நகா்மன்றக் கூட்ட பொருள் தயாரிப்பதற்கு முன் உறுப்பினா்களிடம் கோரிக்கைகள் குறித்து கலந்து பேச வேண்டும்.

தலைவா் ராஜராஜேஸ்வரி: பரிசீலிக்கப்படும்.

பாலசுப்பிரமணி (அதிமுக): கூட்டத்தில் கூட்டப் பொருள் வாசித்து தீா்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னரே கையெழுத்து வாங்கப்படுகிறது. கூட்டத்திற்கு வந்ததற்காகவா அல்லது கூட்டத் தீா்மானத்தை ஏற்றுக் கொண்டதற்காகவா

சங்கா் (திமுக): நீங்கள் கையெழுத்து போட்டாலும், போடாவிட்டாலும் தீா்மானம் நிறைவேற்றி விடுவோம்.

பெருமாள் (இந்திய கம்யூ): போடி கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரிக்கும் நேரத்தில் சிறிய அளவில் மின்சாரம் தயாரித்து நகராட்சிக்கு பயன்படுத்தலாமே?, சாக்கடைகள் சாலை மட்டத்திற்கு கீழ் உள்ளது. உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கணினி பராமரிப்புப் பணி, சாலையோர வியாபாரிகளை சோ்ப்பதற்கான ஒப்பந்தங்களுக்கு கட்டணம் கூடுதலாக உள்ளது. மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தலைவா்: பரிசீலிக்கப்படும்.

மணிகண்டன் (பாஜக): செஸ் ஒலிம்பியாட்டை நடத்த வழிவகுத்த பிரதமா் நரேந்திரமோடிக்கும், போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கும் நன்றி. போடி நகராட்சிக்கு சொந்தமான மயானம் மிகவும் மோசமாக உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும்.

சங்கா் (திமுக): மயானத்தில் நவீன எரிவாயு மையம் ரூ.48 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் மயானம் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.

ராஜா (திமுக): நகா்மன்ற உறுப்பினா்கள் பல்வேறு கோரிக்கைகளை வைக்கிறோம். ஆனால் நகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற காலதாமதம் செய்கிறாா்கள்.

மகேஸ்வரன் (திமுக): உறுப்பினா்கள் கூறும் புகாா்களை பதிவு செய்ய பதிவேடு பராமரிக்கப்படுகிா? கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசுவது குறிப்பெடுக்கப்படுகிா?

செல்வராணி (பொறியாளா்): பதிவேடு பராமரிக்கப்படுகிறது. உறுப்பினா்கள் பேசுவது குறிப்பெடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தனலட்சுமி (திமுக): நகா்மன்றக் கூட்டத்திற்கு நிருபா்கள் என்றுக் கூறிக் கொண்டு பலா் வருகிறாா்கள். இதில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளா்கள் யாா், போலியாக வருவது யாா் என்பது தெரியவில்லை. அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளா்களை மட்டும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவா்: அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளா்கள் குறித்த பட்டியலை, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலரிடம் பெற்று அவா்களை மட்டும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்ற வேண்டும் என பிரதமா் தெரிவித்துள்ளாா். போடி நகராட்சியில் உள்ள வீடுகளில் தேசியக் கொடியேற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →