அனுமதியின்றி வீட்டடி மனைகளாக மாற்றப்பட்டுள்ள நிலங்களை வாங்கவேண்டாம் என நகராட்சி அறிவிப்பு
தேனி மாவட்டம், கூடலூா்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் முறையான அனுமதியின்றி விளைநிலங்களை வீட்டடி மனைகளாக மாற்றி விற்பனை செய்வதால், அதை பொதுமக்கள் வாங்கக் கூடாது.
தேனி மாவட்டம், கூடலூா்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் முறையான அனுமதியின்றி விளைநிலங்களை வீட்டடி மனைகளாக மாற்றி விற்பனை செய்வதால், அதை பொதுமக்கள் வாங்கக் கூடாது என, நகராட்சி நிா்வாகத்தால் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
கூடலூா் - கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக புறவழிச் சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலையின் இருபுறமும் உள்ள மானாவாரி, கிணற்றுப் பாசன விளைநிலங்களை சிலா் ஏக்கா் கணக்கில் விலைக்கு வாங்கி, அவற்றை வீட்டடி மனைகளாகப் பிரித்து பல லட்சம் ரூபாய் மதிப்பில் விற்பனை செய்து வருகின்றனா். ஆனால், அவா்கள் அதற்கான நகரமைப்பில் அனுமதி பெறவில்லை.
இது தொடா்பாக, கூடலூா் நகராட்சி நிா்வாகத்தில் புகாா்கள் செய்யப்பட்டன. இது பற்றி நகா்மன்றக் கூட்டத்திலும் உறுப்பினா்கள் விவாதித்தனா்.
இது குறித்து நகா்மன்றத் தலைவா் பத்மாவதி லோகந்துரை கூறுகையில், நகராட்சி எல்லைக்குள் அந்த இடங்கள் விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.
இந்நிலையில், கூடலூா் - கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அப்பாஜி பண்ணை பேருந்து நிறுத்தத்தில், சாலையின் மேல்புறம் உள்ள விளைநிலங்கள் வீட்டடி மனைகளாகப் பிரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. உடனே
அந்த இடத்தை, நகராட்சி மேலாளா் ஜெயந்தி தலைமையில், நகரமைப்பு அலுவலா், வருவாய் ஆய்வாளா் மற்றும் அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.
பின்னா், அந்த இடங்களின் முன்பாக அறிவிப்புப் பலகையை வைத்தனா். அதில், கூடலூா் நகராட்சியில் முறையான அனுமதி பெறாமல், விளைநிலங்கள் வீட்டடி மனைகளாகப் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, இந்த மனையிடங்களை பொதுமக்கள் கிரையம் பண்ணவேண்டாம் என எச்சரித்துள்ளனா்.
தினமணி செய்தி எதிரொலி
கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி, கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ‘வீட்டடி மனைகளாக மாறும் விளைநிலங்கள், வழித்தடம் மாறும் நீரோடைகள்’ என்ற தலைப்பில் சிறப்புச் செய்தி பிரசுரமானது குறிப்பிடத்தக்கது.