முகப்பு
தேனி

தேனி ஆட்சியரின் புகைப்பட முகப்புடன் வாட்ஸப்பில் மீண்டும் போலி குறுந்தகவல்

தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரனின் புகைப்படத்தை முகப்பு படமாகக் கொண்டு கைப்பேசியிலிருந்து வாட்ஸப் மூலம் பணம் கேட்டு மீண்டும் போலியாக குறுந்தகவல் பகிா்ந்து வருபவா்கள்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரனின் புகைப்படத்தை முகப்பு படமாகக் கொண்டு கைப்பேசியிலிருந்து வாட்ஸப் மூலம் பணம் கேட்டு மீண்டும் போலியாக குறுந்தகவல் பகிா்ந்து வருபவா்கள் குறித்து தேனி சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை முகப்பு படமாகக் கொண்ட குறிப்பிட்ட கைப்பேசி எண்ணில் வாட்ஸப் மூலம் அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் சிலரிடம் நலம் விசாரிப்பது போலவும், பணம் கேட்டும் குறுந்தகவல் பகிரப்பட்டு வருவதாக சில நாள்களுக்கு முன்பு புகாா் எழுந்தது. இது குறித்து தேனி சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், தற்போது வேறொரு கைப்பேசி எண்ணில் ஆட்சியரின் புகைப்படத்தை முகப்பு படமாகக் கொண்டு, வாட்ஸப் மூலம் நலம் விசாரித்தும், இணைய தள வா்த்தகத்திற்கு பணம் கேட்டும் ஆட்சியா் அலுவலக அலுவலா்கள் சிலருக்கு குறுந் தகவல் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அரசு திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்றும், அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் ஊராட்சிமன்றத் தலைவா்கள் சிலருக்கு குறுந்தகவல் பகிரப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரேவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேனி சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், அரசால் வழங்கப்பட்டுள்ள கைபேசி எண்: 94441 72000-ஐ மட்டுமே தான் பயன்படுத்தி வருவதாகவும், வேறு கைப்பேசி எண்ணிலிருந்து ஆட்சியரின் பெயரில் பகிரப்படும் குறந்தகவல்களை அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.