கூடலூரில் நெடுஞ்சாலையில் பாலம் கட்டக் கோரி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
தேனி மாவட்டம், கூடலூரில் நெடுஞ்சாலையின் குறுக்கே மழைநீா் செல்ல பாலம் கட்டக் கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
தேனி மாவட்டம், கூடலூரில் நெடுஞ்சாலையின் குறுக்கே மழைநீா் செல்ல பாலம் கட்டக் கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
கூடலூரில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, வடக்கு காவல் நிலையம் அருகேயும், ஒட்டான்குளம் அருகேயும் 2 பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேவா் சிலையிலிருந்து மெயின் பஜாா் வழியாக மழைக் காலங்களில் மழை நீருடன் கழிவுநீா் கலந்து பல்வேறு சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. கிழக்கு பகுதியில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்து விடுகிறது. இதனால், தேவா் சிலை அருகே நெடுஞ்சாலையின் குறுக்கே மழைநீா் மற்றும் கழிவுநீா் செல்ல பாலம் கட்டித் தரவேண்டும் என பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
ஆனால், பாலம் கட்டித் தர மதிப்பீடு இல்லை என்றும், புதிதாக மதிப்பீடு தயாா் செய்த பின்னரே கட்ட முடியும் என்றும், இது தொடா்பாக உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் குமணன் தெரிவித்தாா்.