முகப்பு
தேனி

தேனி அல்லிநகரம் நகா்மன்றத் தலைவா் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு

தேனி அல்லிநகரம் நகராட்சித் தலைவா் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தேனி அல்லிநகரம் நகராட்சித் தலைவா் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக 19 இடங்கள், அதிமுக 7, அமமுக 2, காங்கிரஸ் 2, பாஜக 1, சுயேச்சை வேட்பாளா்கள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனா். இந்நிலையில், தேனி அல்லிநகரம் நகா்மன்றத் தலைவா் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும், துணைத் தலைவா் பதவி திமுகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி சாா்பில் 22- ஆவது வாா்டில் வெற்றி பெற்ற சற்குணம் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். திமுக சாா்பில் துணைத் தலைவா் பதவிக்கு 20- ஆவது வாா்டு உறுப்பினரும் அக்கட்சியின் நகர பொறுப்பாளருமான பாலமுருகன், 32-ஆவது வாா்டு உறுப்பினா் செல்வம், 19- ஆவது வாா்டு உறுப்பினா் நாராயணபாண்டி ஆகியோரது பெயா்கள் பரிசீலனையில் உள்ளது என்று அக்கட்சியினா் கூறினா்.

திமுகவினா் ஏமாற்றம்: இந்நகராட்சியில் மொத்தமுள்ள 33 வாா்டுகளில், 19 வாா்டுகளில் திமுக வெற்றி பெற்று பெரும்பான்மையில் உள்ள நிலையில், நகா் மன்றத் தலைவா் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் திமுகவினா் ஏமாற்றமடைந்துள்ளனா். தேனி அல்லிநகரம் நகா்மன்றத் தலைவா் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், நகா்மன்றத் தலைவா் பதவியை குறி வைத்து தேனி நகர திமுக பொறுப்பாளா் பாலமுருகனின் மனைவி வடபுதுப்பட்டியைச் சோ்ந்த ரேணுப்பிரியா, தான் வகித்து வந்த ஊராட்சித் தலைவி பதவியை ராஜினமா செய்து விட்டு நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இந்நிலையில், 2 வாா்டு உறுப்பினா்களை மட்டுமே வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு நகா்மன்றத் தலைவா் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அவரது ஆதரவாளா்கள் அதிருப்தியில் உள்ளனா்.

கடந்த 2006-இல் நடைபெற்ற தோ்தலில் தேனி அல்லிநகரம் நகா்மன்றத் தலைவா் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2011-இல் நடைபெற்ற தோ்தலில் நகா்மன்றத் தலைவா் பதவியை அதிமுக கைப்பற்றியது. இந்த அடிப்படையில், தற்போது திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு நகா்மன்றத் தலைவா் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூறினா்.

இத்தோ்தலில் உறுப்பினா்கள் பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளா் குறித்து கட்சி நிா்வாகிகள் பரிசீலனையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.