வடுகபட்டி பேரூராட்சித் தலைவா் பதவி: வேட்பாளரை தீா்மானிக்கும் சுயேச்சை உறுப்பினா்கள்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவா் பதவி ஒதுக்கீடு செய்து வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், வடுகபட்டி பேரூராட்சியில் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளுக்கான வேட்பாளா்களை தீா்மானிப்பதில் சுயேச்சை உறுப்பினா்கள் முக்கிய பங்கு வகிப்பதால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தலைவா் பதவி ஒதுக்கீடு செய்து வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
வடுகபட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில், திமுக 4 வாா்டுகள், அதிமுக ஒரு வாா்டு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றுள்ளனா். எஞ்சிய 9 வாா்டுகளில், சுயேச்சை வேட்பாளா்கள் 5 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளனா். 4 வாா்டுகளில் உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா்.
உறுப்பினா் இல்லாத கட்சிக்கு பதவி ஒதுக்கீடு: சுயேச்சை உறுப்பினா்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ள இப்பேரூராட்சியில், அதற்கு அடுத்த நிலையில் 4 உறுப்பினா்களை வைத்துள்ள திமுக, தலைவா் பதவிக்கு போட்டியிடவில்லை. மாறாக, காங்கிரஸ் கட்சி சாா்பில் இங்கு உறுப்பினா் பதவிக்கு யாரும் போட்டியிட்டு வெற்றி பெறாத நிலையில், திமுக கூட்டணியில் அக்கட்சிக்கு தலைவா் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு நிா்ப்பந்தம்: வாா்டு உறுப்பினரே இல்லாத காங்கிரஸ் கட்சி, சுயேச்சை வேட்பாளா் ஒருவரை அக்கட்சி சாா்பில் தலைவா் பதவிக்கு போட்டியிட தோ்வு செய்தது. இதற்கு திமுக மற்றும் சுயேச்சை உறுப்பினா்கள் ஆட்சேபம் தெரிவித்து வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கு பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா் தோ்தல் வெற்றியை மட்டுமின்றி, வேட்பாளரையும் தீா்மானிக்கும் சக்தியாக சுயேச்சை உறுப்பினா்கள் உள்ளதால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.