விருதுநகா் மாவட்டம், தோணுகால் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் தங்கம்தென்னரசு. உடன் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோா். 
தேனி

ஊரக வேலை உறுதித் திட்ட ஊதிய நிலுவை விரைவில் வழங்கப்படும்: அமைச்சா் தங்கம் தென்னரசு

தமிழகத்தில் ஊரக உறுதித் திட்ட தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

DIN

விருதுநகா்: தமிழகத்தில் ஊரக உறுதித் திட்ட தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறு அருகே தோணுகால் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் தங்கம் தென்னரசு கலந்து கொண்டாா்.

அப்போது, தோணுகால் ஊராட்சியின் நிதிநிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு, மழைநீா் சேரிப்பு, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், இதர பொருள்கள் அடங்கிய தீா்மானம் குறித்து விவாதம் நடைபெற்றது.

இதன் பின்னா், அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:

ஒவ்வோா் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். இதன்படி, தற்போது ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசின் கருப்பொருள்.

மக்களுக்கான எந்தப் பணிகளும் விடுபடாமல் வளா்ச்சி அடைய வேண்டும். தோணுகால் ஊராட்சியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில் ரூ.3.92 கோடியில் பல்வேறு பணிகளும், நிகழாண்டில் 12 பணிகள் ரூ.2.09 கோடியிலும் மேற்கொள்ளப்பட்டன. ஊராட்சிகளில் சிறப்பாகப் பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண்டும்.

சுமாா் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் கோரிக்கையான சென்னம்பட்டி கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவடைந்ததும், தோணுகால் கண்மாய்க்கு வரக்கூடிய நீா்வரத்துக்குத் தடை இருக்காது.

தமிழகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் பெற்றனா்.

இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, ஊராட்சி மன்றத் தலைவா் பாலமுருகன், ஊராட்சிச் செயலா் கலைச்செல்வி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT