தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தகுதியுள்ளவா்கள், வருகிற 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையில் 2 ஆயுஷ் மருத்துவ அலுவலா்கள், 6 மருத்துவ ஆலோசகா்கள், 6 மருந்தாளா்கள், 4 இளநிலை உதவியாளா்கள், 24 செவிலியா் சிகிச்சை உதவியாளா்கள், 2 ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளா்கள், 34 பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் என மொத்தம் 78 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்கள் மாவட்ட நல வாழ்வுச் சங்கம் மூலம் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.
காலிப் பணியிடங்களுக்கான தகுதிகள், விவரங்கள், விண்ணப்பப் படிவங்கள் போன்றவை குறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவா்கள் இணையத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை சுய விவரக் குறிப்பு, சுய கையொப்பமிட்டக் கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றுடன் இணைத்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா், மாவட்ட சித்த மருத்துவமனை, ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், க.விலக்கு, தேனி-625512 என்ற முகவரிக்கு வருகிற 24-ஆம் தேதி, மாலை 5 மணிக்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.