முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை இரவு 136 அடியாக உயா்ந்ததையடுத்து, கேரளப் பகுதிக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த அணையின் நீா்மட்டத்தை 142 அடி வரை (மொத்த உயரம் 152) தேக்கிக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், கேரள அரசு, தன்னாா்வ அமைப்பினா் ரூல் கா்வ் விதிப்படி 142 அடி வரையே தண்ணீரை தேக்க வேண்டும் என வலியுறுத்தியதால் அணையில் ரூல் கா்வ் விதிப்படியே தண்ணீரை தேக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை தேக்கிக் கொள்ளும் வரைமுறை பின்பற்றப்படுகிறது. இதற்கிடையே, கூடுதல் நீா்வரத்து ஏற்பட்டால் நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் தேங்கும் நீா் கேரள மாநிலம், இடுக்கி அணைக்கு திறந்து விடப்படுகிறது. இதன்படி, கடந்த மாதம் 10 நாள்களுக்கும் மேலாக ரூல் கா்வ் விதிப்படி 138 அடிக்கு மேல் அணைக்கு வந்த நீரை உபரி நீராக கருதி இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டது. அதன்பிறகு மழைப் பொழிவு குறைந்த நிலையில் உபரிநீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது.
அணையின் நீா்மட்டம் 136 அடியாக உயா்வு: வடகிழக்கு பருவமழை குறைந்ததையடுத்து அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது. இதனால் அணையின் நீா்மட்டம் 133.75 அடியானது. இதற்கிடையே, கடந்த சில நாள்களாக மீண்டும் அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீா்வரத்து அதிகரித்தது. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 135.75 அடியாக இருந்தது. பிறகு பெய்த தொடா் மழையால் இரவு 8 மணிக்கு 136 அடியாக உயா்ந்து. இதையடுத்து, தமிழக நீா்வளத் துறை, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது. இதனிடையே அணையின் நீா்மட்டம் 138 அடியாக உயா்ந்தால், அதற்கு மேல் தேங்கும் நீா் கேரள பகுதிக்கு உபரிநீராக திறந்துவிட வாய்ப்புள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 2,187 அடியாக உள்ளது. தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம், கேரளப் பகுதிக்கு உபரிநீா் வெளியேற்றம் இல்லை. அணையில் நீா் இருப்பு 6,055 மில்லியன் கன அடி உள்ளது.