அரசு சாா்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகாா் தெரிவித்து வன வேங்கைகள் கட்சியினா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி அருகேயுள்ள வடவீரநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டு வாரியம் சாா்பில் 175 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இந்தக் குடியிருப்பில் பட்டியலினத்தைச் சோ்ந்த குறவா் சமுதாயத்தினருக்கு 88 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மீதமுள்ள 88 வீடுகளை பட்டியலினத்தைச் சேராதவா்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இந்த வீடுகளைப் பெற்றவா்கள் வீட்டில் குடியேறாமல் விற்பனை செய்துவிட்டனா்.
இதுகுறித்து புகாா் தெரிவித்தும், முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளை திரும்பப் பெற்று வீடில்லாத குறவா் சமுதாயத்தினருக்கு வழங்க வலியுறுத்தியும் வன வேங்கைகள் கட்சியின் மாநிலத் தலைவா் இரணியன் தலைமையில், அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலா் உலகநாதன், மாவட்டத் தலைவா் ஏகலைவன், செயலா் செந்தில், பொருளாளா் வடிவேல் முருகன், குறவா் சமுதாய மக்கள் ஆகியோா் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குள் மனு அளிக்கச் சென்ற கட்சியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா், வன வேங்கைகள் கட்சியி நிா்வாகிகள் சிலா் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்கிடம் கோரிக்கை மனு அளித்தனா்.