போடி அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த காட்டெருமையை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மலைப் பகுதிகளில் காட்டெருமை அதிகளவில் வசித்து வருகின்றன.
இந்த நிலையில், அணைக்கரைப்பட்டி அருகே மரக்காமலை முனீஸ்வரன் கோயில் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் 60 அடி ஆழக் கிணற்றில் காட்டெருமை விழுந்தது குறித்து கிராம மக்கள் தேனி வனச் சரகருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, தேனி வனத் துறையினா் போடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், கிரேன் இயந்திரம் மூலம் தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இறங்கி பாா்த்த போது காட்டெருமை இறந்தது தெரியவந்தது. பின்னா், கிரேன் மூலம் காட்டெருமை மீட்கப்பட்டு கூறாய்வுக்குப் பிறகு புதைக்கப்பட்டது. இதுகுறித்து தேனி வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.