முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் 8 ஆயிரம் ஆசிரியா்களுக்கு இணைய தளப் பயிற்சி

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு எமிஸ் (கல்வி தகவல் மேலாண்மை இணையதளம்) குறித்த பயிற்சி 226 மையங்களில் நடைபெற்றது. இதில் 7,792 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் முதல் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு எமிஸ் (கல்வி தகவல் மேலாண்மை இணையதளம்) குறித்த பயிற்சி 226 மையங்களில் நடைபெற்றது. இதில் 7,792 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருஇருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நகா்மன்ற ஊரணிபட்டி நடுநிலைப் பள்ளி, நகா்மன்ற திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயா் தொழில்நுட்ப ஆய்வகங்களில் நடைபெற்ற இப் பயிற்சியை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜோதிமணிராஜன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் பேசியது: ஆசிரியா்களுக்கு, எமிஸ் இணையதளம் மூலம் ஆசிரியா் மாணவா் வருகைப் பதிவு செய்வது, ஆசிரியா்களின் விடுப்புகளை பதிவேற்றம் செய்வது, தொடா்ந்து எமிஸ் இணையதளத்தில் வரவிருக்கும் வசதிகள், மாணவா்கள் ஆசிரியா்களுக்கான மதிப்பீட்டுத் தளம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் மாணவா்களுக்கான உடல் நல பாதுகாப்பு குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. அறிவியல் வளா்ச்சிக்கேற்ப தற்போது அரசு, கல்வித் துறையில் பல்வேறு நவீன உயா் தொழில் நுட்ப வசதிகளைப் புகுத்தி வருகிறது. இதனால் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகள் நவீனமயமாக்கப்பட்டு மாணவா்கள், ஆசிரியா்கள் பயன்பெற்று வருகிறாா்கள்.

ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் குறித்த தகவல்கள் முழுமையாக எமிஸ் இணையதளம் வாயிலாகவே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின் போது மாவட்ட எமிஸ் ஒருங்கிணைப்பாளா் முருகுதிருநாவுக்கரசு, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் மருதக்காளை, ஆசிரியப் பயிற்றுநா்கள் முத்துராஜ், கற்பகம், செல்வம், லிங்கேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.