முகப்பு
விருதுநகர்

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

பல ஆண்டுகளாக கோயில் மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த மனு கொடுக்கும் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செற்குழு உறுப்பினா் எம். முத்துக்குமாா் தலமை வகித்தாா்.

போராட்டத்தின்போது, பல ஆண்டுகளாக கோயில் நிலங்கள் மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். நீா்நிலைப் புறம்போக்குகளில் வசிப்போருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவதுடன், வீடற்றவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

நிலம் உள்ளவா்களுக்கு வீடு கட்ட மானியத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

முன்னதாக, போராட்டத்தை தொடங்கிவைத்து கட்சியின் மாவட்டச் செயலா் கே. அா்ஜூனன் பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி. முருகன் கோரிக்கை குறித்து விளக்கினாா். இதில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

முடிவில், மாவட்ட வருவாய் அலுவலா் மங்களராமசுப்பிரமணியனிடம் மனு அளிக்கப்பட்டது. அவா், சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டோா் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.