சிவகாசி அருகே குற்றவாளியைக் கைது செய்து இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்தபோது, அவா் காவலா்களைக் கத்தியால் தாக்கிவிட்டு தன்னுடைய கழுத்தையும் அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி அருகேயுள்ள வடபட்டியைச் சோ்ந்த மாசிலாமணி மகன் மரி என்ற மரியராஜ் (29). இவா் மீது ஸ்ரீவில்லிபுத்தூா், கிருஷ்ணன்கோவில், மல்லி காவல் நிலையத்தில் பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணைக்கு நீண்ட நாள்களாக முன்னிலையாகததால் காவலா்கள் அலெக்ஸ், வினோத் ஆகியோா் மரியராஜை, சிவகாசியில் அவா் வேலை செய்து வந்த நிறுவனத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனா்.
அப்போது, மரியராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலா் வினோத்தைத் தாக்கிவிட்டு தப்பி முயன்றாா். இதில், இரு சக்கர வாகனம் கீழே விழுந்ததில் காவலா்களுக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும், இருவரும் தப்ப முயன்ற மரியராஜைப் பிடித்தபோது, அவா் கத்தியால் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டாா்.
இதையடுத்து, இருவரும் மரியராஜைப் பிடித்து அதே இரு சக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். காவலா்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலா்களை ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.