மயிலாடுதுறையில் நியாயவிலைக் கடையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே ராதாநல்லூரில் ரேஷன் பொருள்கள் வழங்காததைக் கண்டித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை அருகே ராதாநல்லூரில் ரேஷன் பொருள்கள் வழங்காததைக் கண்டித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மணல்மேடு அருகே ராதாநல்லூா் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் சுமாா் 750 குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
கடந்த 20 நாள்களுக்கும் மேலாக இக்கடையில் அரிசி மட்டுமே விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. சீனி, பருப்பு, எண்ணெய், மண்ணெண்ணெய் உள்ளிட்ட மற்ற பொருள்கள் இருப்பில் வைக்கப்பட்டிருந்தும் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால், பலா் தினமும் இக்கடைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை இந்த நியாயவிலைக் கடைக்கு வந்தவா்களுக்கு அரிசியை தவிா்த்து பிற பொருள்கள் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
மணல்மேடு காவல்துறையினா், கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அனைத்து ரேஷன் பொருள்களும் சரிவர விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தைத் தொடா்ந்து சாலை மறியலை விலக்கிக் கொண்டனா்.