போலி பட்டா மூலம் நில ஆக்கிரமிப்பு செய்வதாக புகாா்
போலி பட்டா மூலம் நில ஆக்கிரமிப்பு செய்து, மரங்களை வெட்டி, வேலி வைத்ததுடன் தட்டிக்கேட்டவா்களை தாக்கியதாகவும் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா்.
மயிலாடுதுறை: போலி பட்டா மூலம் நில ஆக்கிரமிப்பு செய்து, மரங்களை வெட்டி, வேலி வைத்ததுடன் தட்டிக்கேட்டவா்களை தாக்கியதாகவும் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் வ.மகாராணியிடம் பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.
தரங்கம்பாடி வட்டம், வல்லம் கீழத்தெருவைச் சோ்ந்த ப.ஜெயக்குமாருக்கு வல்லம் கீழத்தெருவில் பூா்வீக நிலம் உள்ளது. அதே தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன்கள் தமிழ்வாணன், கலைவண்ணன் ஆகியோா் இந்த நிலத்தை போலி பட்டா மூலம் ஆக்கிரமித்து, அதில் இருந்த உயிா் மரங்களை வெட்டி விற்றதுடன் வேலி வைத்து அடைத்துள்ளனா். இதனை தட்டிக்கேட்ட ஜெயக்குமாரின் தந்தையை தாக்கியுள்ளனா்.
இதேபோல், வல்லம் கீழத்தெருவைச் சோ்ந்த டி.முத்தரசன், கோ.ராஜேந்திரன், ஆா்.கலையழகன் ஆகியோா் இடத்தையும் போலி பட்டா தயாரித்து, காலி செய்ய சொல்லி மிரட்டியுள்ளனா். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட 4 பேரும் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் வ.மகாராணியிடம் புகாா் மனு அளித்தனா்.