முகப்பு
காரைக்கால்

தட்சணமுத்து மாரியம்மன் கோயிலில் முளைப்பாலிகை வழிபாடு

காரைக்கால் ஸ்ரீதட்சணமுத்து மாரியம்மன் கோயில் முளைப்பாலிகை திருவிழாவையொட்டி, புதன்கிழமை இரவு திரளான பக்தர்கள் முளைப்பாலிகை சுமந்து அரசலாற்றில் தீர்த்தவாரிக்கு சென்றனர்.

Updated On : 30 மார்ச், 2018 at 1:20 AM
பகிர்:

காரைக்கால் ஸ்ரீதட்சணமுத்து மாரியம்மன் கோயில் முளைப்பாலிகை திருவிழாவையொட்டி, புதன்கிழமை இரவு திரளான பக்தர்கள் முளைப்பாலிகை சுமந்து அரசலாற்றில் தீர்த்தவாரிக்கு சென்றனர்.
காரைக்கால் ஸ்ரீதட்சணமுத்து மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முளைப்பாலிகைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா மார்ச் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, லட்சார்ச்சனை, காவடி எடுத்தல், திருவிளக்கு வழிபாடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. 
முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாலிகை சுமந்து தீர்த்தவாரிக்கு செல்லும் நிகழ்வு புதன்கிழமை இரவு 11 மணியளவில் நடைபெற்றது.
கோயிலில் ஸ்ரீதட்சணமுத்து மாரியம்மன், ஸ்ரீநடன காளியம்மன், ஸ்ரீபத்ரகாளியம்மன், ஸ்ரீபடைபத்ர காளியம்மன் ஆகியவை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் தங்களது வீட்டில் மண் சட்டியில் பயறு விதைத்து, முளைத்திருந்த பக்குவத்தில் கோயிலுக்கு கொண்டுவந்து வைத்தனர். முளைப்பாலிகையை வைத்து அதைச்சுற்றி பக்தர்கள் நின்று வழிபாடு செய்தனர். பின்னர் பிரார்த்தனையின்பேரில்  பக்தர்கள் முளைப்பாலிகையை சுமந்து அரசலாற்றங்கரைக்கு ஊர்வலமாக சென்றனர். இவர்களைத் தொடர்ந்து அம்பாள்கள் தனித்தனியே தீர்த்தவாரிக்கு எழுந்தருளின. 
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச். நாஜிம் உள்ளிட்ட  திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 
அரசலாற்றங்கரையில் வியாழக்கிழமை அதிகாலை  சுவாமிகள் தீர்த்தவாரி செய்தன. வெள்ளிக்கிழமை (மார்ச் 30) ஸ்ரீதட்சணமுத்து மாரியம்மன் மற்றும் ஸ்ரீநடனகாளியம்மன் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெறுகிறது. ஏப்.1-ஆம் தேதி புஷ்பாஞ்சலி மற்றும் விடையாற்றியுடன் உத்ஸவம்  நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.