முகப்பு
காரைக்கால்

கழிவுநீர் வடிகாலில் இறங்கி சுத்தம் செய்யும் பணி: அமைச்சருக்கு ஆளுநர் கிரண் பேடி பாராட்டு

திருநள்ளாறு அருகே அம்பகரத்தூரில் 2 -ஆவது வாரமாக, கழிவுநீர் வடிகாலில் பொதுமக்கள் பங்களிப்புடன் இறங்கி புதுச்சேரி அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்

Updated On : 3 செப்டம்பர், 2018 at 6:22 AM
பகிர்:

திருநள்ளாறு அருகே அம்பகரத்தூரில் 2 -ஆவது வாரமாக, கழிவுநீர் வடிகாலில் பொதுமக்கள் பங்களிப்புடன் இறங்கி புதுச்சேரி அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இவரது செயலை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பாராட்டினார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர்  கிரண் பேடியின் உத்தரவின்பேரில், காரைக்கால் மாவட்டத்தில் சுமார் ஓராண்டு காலம் வாரந்தோறும் சனிக்கிழமை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்புடன், மாவட்ட நிர்வாகம்,  நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் தூய்மை விழிப்புணர்வு மற்றும் கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தூய்மையான காரைக்கால், பசுமையான காரைக்கால் என்ற பெயரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பணி கடந்த பல மாதங்களாக மேற்கொள்ளப்படாமல் நிறுத்தப்பட்டது.
நகராட்சியின் 18 வார்டுகளில் தனியார் பங்களிப்புடன் வீடுகளில் நேரடியாகச் சென்று குப்பைகள் வாங்கப்படுகிறது. ஆனால், சாலையோர சாக்கடை முறையாக  சுத்தம் செய்யப்படுவதில்லை. இதேபோல நிரவி, திருப்பட்டினம், கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருநள்ளாறு ஆகிய கொம்யூன்களிலும் குப்பைகள் அகற்றமும், கழிவுநீர் அகற்றமும் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. பஞ்சாயத்துகளில் போதிய தொழிலாளர்கள் இல்லாததே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
காரைக்காலில் வாய்க்கால்கள், கழிவுநீர் வடிகால்கள் யாவும் ஆக்கிரமிப்பாலும், கோரைப்புல் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகளால் அடைபட்டு, தண்ணீர் வடியமுடியாத நிலையே காணப்படுகிறது. கேரளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மக்கள் அனைவரையும் ஈர்த்த நிலையில், அடுத்த ஓரிரு மாதங்களில் தொடங்கவுள்ள பருவமழைக்குள் காரைக்காலில் அனைத்து வடிகால்களையும் தூர்வாரவேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுப்பப்பட்டு வருகிறது.
வாய்க்கால்கள், சாக்கடைகளில் கழிவுநீர் தேக்கம் என்பது மாவட்ட அளவில் காணப்படுகிறது. கொசு உற்பத்திக் கேந்திரமாக இவை திகழ்கின்றன. 
பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் காரணிகளாக இது திகழும்போது, கொசு உற்பத்தியை தடுக்கும் விதத்தினாலான நடவடிக்கையும் அரசு தரப்பால் எடுக்கப்படவில்லை. அனைத்துக்குமே நிதியும், ஆள் பற்றாக்குறையும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன் அம்பகரத்தூர் பகுதியில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கடந்த மாத இறுதியில், பொதுமக்கள், பஞ்சாயத்து நிர்வாகத்தினர் பங்களிப்புடன் தாமே கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி, பல மணி நேரம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். 
அம்பகரத்தூர் மந்தைகரை என்கிற பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, பெரிய கடைத்தெரு, மாரியம்மன் கோயில் உள்ளிட்டவற்றிலிருந்து  வெளியேறும் கழிவுநீர், சாலையோர சாக்கடையில் ஆங்காங்கே தேங்கி, துர்நாற்றத்தை ஏற்படுத்திவருகிறது. இது பள்ளி செல்லும் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதை அறிந்த அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், 2-ஆவது வாரமாக திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துப் பணியாளர்கள், அந்த பகுதியை  சேர்ந்த மக்கள் பங்களிப்புடன் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். 
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பணியின் நிறைவாக அமைச்சர் கூறியது :
சுத்தம் என்பது நம்மிலிருந்தே தொடங்க வேண்டும். பிறர் வந்து நமது பகுதியை சுத்தம் செய்வார்கள் என்பதை எதிர்பார்ப்பதைவிட, நாமே நமது பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வு அனைவருக்கும் வரவேண்டும். எல்லோருக்கும் இந்த எண்ணம் வரவேண்டும் என்ற வகையில், நானே நேரடியாக கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகிறேன்.
சுயவிளம்பரத்துக்காகவோ, பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ நான் இதை செய்ய முன்வரவில்லை. கடந்த வாரம் நான் நேரடியாக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதால், நிகழ்வாரப் பணியில் மக்கள் தாமே முன்வந்துவிட்டனர்.
திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், தொழிலாளர்கள், அம்பகரத்தூர் பகுதி இளைஞர்கள், முஸ்லிம் ஜமாத்தார்கள், பொதுமக்கள் என பலரும் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். இந்த போக்கு மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது. அடுத்த வாரத்தில் திருநள்ளாறு பகுதியில் இவ்வாறான பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு பணியை பாராட்டினார். இவ்வாறான பணியில் ஈடுபடும் அனைவரும் முகக்கவசம், கையுறை, காலுக்கு ஷூ உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ஈடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். நோய்த் தொற்று ஏற்பட்டுவிடாத வகையில் பாதுகாப்பு முறைகளில் சிறப்பு கவனம்  செலுத்த அவர் கேட்டுக்கொண்டார். அடுத்த வாரம் திருநள்ளாறில்  நடைபெறவுள்ள இந்த பணியில் தாமும் (ஆளுநர்) பங்கேற்கவுள்ளதாக தெரிவித்தார்.
இந்த பணி தொடர்பான தகவல்களை அறிந்த திருநள்ளாறைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இளைஞர்கள், இந்த பணியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கும் வகையில் உணவு உள்ளிட்ட உதவிகளை அவர்கள் நண்பர்கள் மூலம் செய்ய முன்வந்தனர். தூய்மையில் அவரவர்களே ஈடுபடுவது  என்பது மக்கள் இயக்கமாக மாறவேண்டும் என்றார் அமைச்சர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.