பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயணம்: பைக்கில் காரைக்காலுக்கு வந்த சமூக ஆர்வலர்
பிளாஸ்டிக் ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு பயணம்
பிளாஸ்டிக் ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள சமூக நல ஆர்வலர் சைபி மேத்யூ காரைக்காலுக்கு திங்கள்கிழமை வந்தார்.
இருசக்கர வாகனத்தில் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொது மக்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கை விவசாயம், பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட சைபி மேத்யூ காரைக்காலுக்கு வந்தார். எஸ்.ஆர்.வி.எஸ். மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற அவரை, பள்ளி முதல்வர் கந்தசாமி, துணை முதல்வர் சுமதி, தலைமையாசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், பள்ளி மாணவ, மாணவியரிடையே அவர் பேசியது:
குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பையாக தரம் பிரித்து ஒப்படைக்க பழகிக்கொள்ளவேண்டும். இதன் மூலம் குப்பைகள் மறு சுழற்சியால் பல உபயோகப் பொருள்கள் கிடைக்கும். குப்பைகளினால் ஏற்படும் சுகாதாரக் கேடு குறித்த புரிதல் மாணவர்களுக்கு இருக்கவேண்டும். மரம் வளர்ப்பில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தவேண்டும். இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இன்றியமையாதது என்பதை உணரவேண்டும். இயற்கை விவசாயம் மிக முக்கியமானதாகும். இதன் மீதான ஆர்வம் விவசாயிகளுக்கு ஏற்படும் வகையில் மாணவர்களின் பங்களிப்பு இருக்கவேண்டும். சமூக சேவையில் பெண்கள் அதிகமாக ஈடுபடுவதில்லை. கல்வி கற்பதிலும், சமூக அக்கறையிலும் பெண்கள் அதிக ஈடுபாடு காட்டவேண்டும் என்றார் அவர். இயற்கையைப் பாதுகாப்பதை நமது கடமையாக்குவோம் என அவரது முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திறன் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி: முன்னதாக இப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கான திறன் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர். பாட்டு, நடனம், இசை, திருக்குறள் ஒப்பித்தல், கராத்தே, ஆபரணங்கள் தயாரித்தல், கையெழுத்து, பேச்சுப் போட்டிகள் மூலம் மாணவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தினர்.