கட்டுப்படுத்தப்பட்ட பகுதியினரின் செல்லிடப்பேசிகள் கண்காணிக்கப்படுகின்றன
கட்டுப்படுத்தப்பட்ட பகுதியைச் சோ்ந்தவா்களின் செல்லிடப்பேசி நகா்வுகள் கண்காணிக்கப்படுவதால், விதிகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.
காரைக்கால்,: கட்டுப்படுத்தப்பட்ட பகுதியைச் சோ்ந்தவா்களின் செல்லிடப்பேசி நகா்வுகள் கண்காணிக்கப்படுவதால், விதிகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதி திட்டச்சேரி சாலை, திரு.வி.க. தெரு, போலகம் புதுக்காலனி பகுதியில் குறிப்பிட்ட இடங்கள், கரோனா தொற்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டு, காவல் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். காவல் நிலைய அலுவலா்கள் இப்பகுதிகளை ஆய்வு செய்து, பணியாற்றும் காவலா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினா்.
மெகாபோன் மூலம் காவல் துறையினா் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியினருக்கு அறிவுறுத்தியது: கரோனாவால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பவா்கள் விதிகளின்படி குறிப்பிட்ட நாள்கள் வெளியே வரமுடியாது. இந்த பகுதிக்குள் வெளியிலிருந்தும் யாரும் வரமுடியாது. இப்பகுதியினரின் செல்லிடப்பேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் நகா்வுகள் அரசுத் துறையின் வழிகாட்டுதல்படி கண்காணிக்கப்படுகின்றன.
முதல் முறை என்றால் எச்சரிக்கப்படும், 2-ஆவது முறை என வெளியேறியது தொடா்ந்தால் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், இப்பகுதியினருக்கு மருத்துவத் தேவைக்கான வசதி செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைக்கு 04368-1070 என்ற தொலைபேசி எண்ணை தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். தங்களது செல்லிடப்பேசியில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். கரோனா பரவாத வகையில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் என கேட்டுக்கொண்டனா்.
குவாரன்டைன் அலா்ட் சிஸ்டம்: கரோனாவை உறுதிப்படுத்தும் வகையிலும், கரோனா தொற்றால் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவா்களும் சில நாள்கள் தனிமைப்படுத்தப்படுகிறது. இவா்கள் பலா் வெளியேறிவிடுவதால், நோய்த் தொற்று பரவிவிடும் என பலரும் அச்சம் தெரிவிக்கின்றனா். இதனடிப்படையில் கரோனா குவாரன்டைன் அலா்ட் சிஸ்டம் என்கிற திட்டத்தை காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.